மகேந்திரமங்கலம் அருகே மதுபோதையில் விஷம் குடித்த முதியவர் சாவு
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே மதுபோதையில் விஷம் குடித்த முதியவர் பலியானார்.
முதியவர்
மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 60). இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.1,000 அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்கினார். பின்னர் அவர் டாஸ்மாக் கடைக்கு சென்று அந்த பணத்தில் மது வாங்கி அருந்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மதுபோதையில் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) மதுபோதையில் தவறுதலாக எடுத்து குடித்தார். இதனால் சிறுது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
சாவு
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி மகன் முருகேசன், அவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ம்அகேந்திரமங்கலம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பொன்னுசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.