காட்டுத்தீயை அணைக்க சென்றபோது தவறி விழுந்த வேட்டை தடுப்பு காவலர் சாவு; ஆசனூர் அருகே பரிதாபம்


காட்டுத்தீயை அணைக்க சென்றபோது தவறி விழுந்த வேட்டை தடுப்பு காவலர் சாவு; ஆசனூர் அருகே பரிதாபம்
x

ஆசனூர் அருகே காட்டுத்தீயை அணைக்க சென்றபோது தவறி விழுந்த வேட்டை தடுப்பு காவலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே காட்டுத்தீயை அணைக்க சென்றபோது தவறி விழுந்த வேட்டை தடுப்பு காவலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காட்டுத்தீ

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்த்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. அதனால் திடீர் திடீரென காட்டுத்தீ பற்றி எரிகிறது. வாகனங்களில் செல்ல வழியில்லாத காட்டுப்பகுதி என்பதால் தற்காலிக பணியாளர்களாக உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் நடந்தே சென்று இலை, தழைகளை பயன்படுத்தி காட்டுத்தீயை கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி ஆசனூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. உடனே தீயை அணைக்க 20-க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் ஒரு குழுவாக காட்டுத்தீ எரிந்துகொண்டு இருந்த பகுதிக்கு நடந்து சென்றார்கள். அவர்களுடன் ஆசனூரை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் (வயது 26) என்பவரும் சென்றிருந்தார்.

தவறி விழுந்தார்

அவர்கள் அனைவரும் பச்சை இலைகளை பயன்படுத்தி தீயை அணைத்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது திடீரென ஆனந்த் தரையில் தவறி விழுந்தார். அதே நேரம் அவருக்கு வலிப்பும் ஏற்பட்டது.

உடனே அருகே இருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் ஆனந்தை தூக்கிக்கொண்டு சாலை வரை வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள்.

உயிரிழந்தார்

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அதன்பிறகு ஈரோட்டில் உள்ள தனியார் நரம்பியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த ஆனந்தின் தந்தை மாதையன், தாய் சரோஜா, அண்ணன் அப்புகுட்டி அனைவரும் கூலிவேலை செய்து வருகிறார்கள். ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ஆனந்த் வேட்டை தடுப்பு காவலராக பணிக்கு சேர்ந்தது குடும்பத்தினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அவர் இறந்தது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Related Tags :
Next Story