இடுப்பில் கல்லை கட்டிய நிலையில் கிணற்றில் கல்லூரி மாணவர் பிணம்
அஞ்சுகிராமம் அருகே உள்ள கிணற்றில் இடுப்பில் கல்லை கட்டிய நிலையில் கல்லூரி மாணவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமம் அருகே உள்ள கிணற்றில் இடுப்பில் கல்லை கட்டிய நிலையில் கல்லூரி மாணவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனாதையாக கிடந்த பை
அஞ்சுகிராமம் ஜேம்ஸ்டவுண் சந்திப்பு அருகில் சுயம்புகனி என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டின் வாசலில் நேற்று பகல் 12 மணியளவில் ஒரு பை அனாதையாக கிடந்தது. சுயம்புகனி அந்த பையை எடுத்து திறந்து பார்த்தார். அதில் ஒரு செல்போன் இருந்தது. அதுவும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர் அதை ஆன் செய்தார்.
அப்போது எதிர் முனையில் ஒரு பெண் பேசினார். அவர் தன் பெயர் தனலெட்சுமி என்றும், அஞ்சுகிராமம் அருகே உள்ள நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் என்றும், அருகில் தன் மகன் ஆண்டனி ஜெபஸ் இருந்தால் பேச சொல்லுங்கள் என்றும் கூறினார். அதற்கு சுயம்புகனி இங்கு யாரும் இல்லை. பை அனாதையாக கிடக்கிறது என தெரிவித்தார்.
தேடி பார்த்தார்
அதைத்தொடர்ந்து தனலெட்சுமி தனது கணவர் ஜேசுராஜனிடம் கூறினார். உடனே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகனை தேடினார். ஆனால் அவரை காணவில்லை. அதே சமயம் புது வீட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கிணற்றில் மகன் செருப்பு மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடி, பாதாள கரண்டி உதவியுடன் தண்ணீரில் இருந்து இறந்த நிலையில் வாலிபர் ஒருவரது உடலை வெளியே தூக்கினார்கள். அவரது இடுப்பில் கயிறால் ஒரு கல் கட்டப்பட்டு இருந்தது.
கல்லூரி மாணவர்
இதுபற்றி அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஜேசுராஜனிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் இறந்தது தன் மகன் ஆண்டனி ஜெபஸ் (வயது 19) என்று கூறி கதறி அழுதார். பின்னர் அவர் கூறுகையில், ஆண்டனி ஜெபஸ் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்ததாகவும், தினமும் காலை 8.30 மணி அளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு ஜேம்ஸ் டவுன் சந்திப்பு வந்து, அங்கிருந்து பஸ் மூலம் கல்லூரிக்கு செல்வது வழக்கம் என்றும் கூறினார். அதே போல் காலை 8.30 மணியளவில் கல்லூரிக்கு செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டு வந்ததாகவும் கூறினார்.
கொலையா?
அதைத்தொடர்ந்து ஆண்டனி ஜெபஸ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆண்டனி ஜெபஸ் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். அதே சமயம் ஆண்டனி ஜெபஸ் வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டு வந்த போது என்ன நடந்தது? இடுப்பில் கல் கட்டப்பட்டு இருந்ததை வைத்து பார்க்கும் போது, அவரை யாரும் கொலை செய்வதற்காக கல்லை கட்டி கிணற்றில் போட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இடுப்பில் கல்லை கட்டிய நிலையம் கல்லூரி மாணவர் சீருடையுடன் கிணற்றினுள் பிணமாக கிடந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.