குற்றாலம் அருவி தடாகத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
குற்றாலம் அருவி தடாகத்தில் நேற்று மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மட்டுமே சீசன் இருக்கும். அப்போது இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து செல்வார்கள். தற்போது சீசன் இல்லாததால் அருவிகள் வறண்டு காணப்படுகின்றன. மெயின் அருவியில் சிறு குழாயில் விழும் தண்ணீர் போன்று குறைவாக தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளும் தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே குற்றாலத்துக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவியின் முன்புறம் உள்ள தடாகத்தில் நேற்று காலை அதிகமான மீன்கள் செத்து மிதந்தன. பல மீன்கள் கரை ஒதுங்கி கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குற்றாலம் பேரூராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மீன்களை அகற்றினர். மீன்கள் என்ன காரணத்தால் இறந்தன என்பது தெரியவில்லை. தற்போது அடித்து வரும் கடுமையான வெயில் காரணமாக இறந்திருக்கலாம் என்று மக்கள் கருதுகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.