மருத்துவ கல்லூரி டீன் நேரில் ஆஜராகி விளக்கம்: கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியின் உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மருத்துவ கல்லூரி டீன் நேரில் ஆஜராகி விளக்கம்: கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியின்  உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும்-  மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 16 வயது சிறுமியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 16 வயது சிறுமியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கிணற்றில் சிறுமி பிணம்

கரூர் மாவட்டம் சவரிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என்னுடைய 16 வயது மகள் கடந்த மாதம் 25-ந்தேதி திடீரென காணாமல் போனாள். மறுநாள் இதே பகுதியில் உள்ள கிணற்றில் அவளது உடல் கிடந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் விதிகளை பின்பற்றாமல் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். என் மகளை கொலை செய்துள்ளனர். எனவே, விதிகளை பின்பற்றி மறுபிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கண்காணிப்பு கேமரா பதிவு

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், மனுதாரரின் மகள் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது பதிவான சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளை மனுதாரருக்கு வழங்க வேண்டும். அதைப் பார்த்து மனுதாரர் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வீடியோ பதிவு மனுதாரரிடம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவ கல்லூரி டீன், பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆஜர்

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

திருச்சி மருத்துவக்கல்லூரி டீன், பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ஆகியோர் நீதிபதி முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அப்போது, மனுதாரர் மகள் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என போலீசார் தரப்பில் கோரப்படவில்லை. எனவே நாங்கள் வீடியோ பதிவு செய்யவில்லை என தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, சிறுமி இறப்புக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவு

பின்னர் ஆஜரான அரசு கூடுதல் வக்கீல் பா.நம்பிசெல்வன், மனுதாரரின் மகள் உடல் அழுகிய நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஏற்கனவே நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் காயங்களோ, பாலியல் தொந்தரவுக்கு ஆளானதற்கான அடையாளங்களோ இல்லை என கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முறையாக விசாரணை நடந்து வருகிறது. எனவே மறுபிரேத பரிசோதனை நடத்த தேவையில்லை. மனுதாரரின் மகள் உடல் கடந்த 10 நாட்களாக அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது என்று வாதாடினார்.

இதை தொடர்ந்து, நீதிபதி, நாளை (அதாவது இன்று) அதிகாலையில் மனுதாரர் மகள் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவு செய்வதும் அவசியம்.

பிரேத பரிசோதனை முடிந்தவுடன் மனுதாரர் தரப்பினர் உடலை உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story