வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
கிருஷ்ணகிரி:
மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலியானார்கள்.
கார் மோதியது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 46). இவர் மோட்டார்சைக்கிளில் தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை டேம் சாலை மேம்பாலம் பக்கமாக நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா முருக்கம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (19). இவர் ஓசூர் பகுதியில் வேலை செய்து வந்தார். சதீஷ்குமார் மோட்டார்சைக்கிளில் கொத்தகொண்டப்பள்ளி டி.வி.எஸ். கம்பெனி அருகில் சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சதீஷ்குமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்ததும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூலித்தொழிலாளி
தேன்கனிக்கோட்டை தாலுகா அகலகோட்டை பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (23). கூலித் தொழிலாளி. இவர் மோட்டார்சைக்கிளில் மாடக்கல்- சூளேகுண்டா சாலையில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.