ஆடு மேய்த்தவர், மின்னல் தாக்கி பலி


ஆடு மேய்த்தவர், மின்னல் தாக்கி பலி
x

சிவகங்கை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் போது மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் போது மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த மழை

சிவகங்கை மாவட்டத்தில் பல நாட்களாக பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாலையில் மாவட்டத்தின் சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது.

இந்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் கண்மாய், ஊருணி மற்றும் குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:- சிவகங்கை-1,மானாமதுரை-46.50, இளையான்குடி-31, திருப்புவனம்- 80.60, காரைக்குடி- 4.60, சிங்கம்புணரி-7, மாவட்டத்தில் குறைந்த அளவாக சிவகங்கையில் ஒரு மில்லி மீட்டர் மழையும் அதிக அளவாக திருப்புவனத்தில் 80. 60 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியது.

மின்னல்

பெய்த மழையின் போது சிவகங்கை மாவட்டம் பழையனூரை அடுத்த கீழ ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த கரந்தமலை (வயது55) என்பவர் அந்த பகுதியில் உள்ள எடுத்தாரேந்தல் கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை மின்னல் தாக்கியது. இதில் அவர் உடல் கருகி அதே இடத்தில் இறந்து போனார். இதுதொடர்பாக பழையனூர் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சிவகங்கை நகரில் நேற்று பகலில் கடும் வெயில் கொளுத்தியது. மாலை 5 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 7 மணிக்கு மேல் நீடித்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியது. மேலும் சிவகங்கை நகர் சிவன் கோவில் பகுதி, அரண்மனை வாசல், பஸ் நிலைய பகுதி போன்ற இடங்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றது. இந்த பலத்த மழையினால் அலுவலகங்களில் பணி புரிபவர்கள் மாலையில் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.


Related Tags :
Next Story