பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி


பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி
x

பராமரிப்பு பணியின்போது ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார். முன்னேற்பாடாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில், மின்கம்பியில் திடீரென மின்சாரம் பாய்ந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்தார்.

விருதுநகர்

விருதுநகர்,

பராமரிப்பு பணியின்போது ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார். முன்னேற்பாடாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில், மின்கம்பியில் திடீரென மின்சாரம் பாய்ந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்தார்.

பராமரிப்பு பணி

தமிழக மின்வாரியம் மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மின்பாதையில் பீங்கான் இன்சுலேட்டரை மாற்றி, ரப்பர் இன்சுலேட்டர்கள் எனும் உபகரணத்தை பொருத்த உத்தரவிட்டு உள்ளது. விருதுநகரிலும் ஒவ்வொரு பகுதியாக பிரித்து தினசரி இந்த பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணியில் மின்வாரியம் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகிறது. விருதுநகர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலம்மாள் நகரில் மின்பாதை பராமரிப்பு பணி நேற்று நடைபெற்றது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் 20 பேர் ஈடுபட்டு இருந்தனர். இதையொட்டி முன்அறிவிப்போடு மின்வினியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது. பராமரிப்பு பணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சித்தாளம்புத்தூரை சேர்ந்த வெயில்செல்வன் (வயது 36), வத்திராயிருப்பு அருகே உள்ள குன்னூரை சேர்ந்த முத்துராஜ் (26) ஆகிய 2 பேரும் ஒரு மின்கம்பத்தில் உள்ள மின்கம்பியை இழுத்து சரிசெய்யும்பணியை மேற்கொண்டனர்.

வெயில்செல்வன் தரையில் இருந்து மின்கம்பியில் கயிற்றை கட்டி மின்கம்பத்தின்மேல் நின்று கொண்டிருந்த முத்துராஜிடம் கொடுத்துக்கொண்டு இருந்தார்.

உயிரிழப்பு

அப்போது திடீரென மின்கம்பியில் மின்சப்ளை வந்ததால் மின்கம்பியை பிடித்துக்கொண்டிருந்த வெயில்செல்வன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து பலியானார். மின்கம்பத்தில் மின் கம்பியை பிடித்து இழுத்துக் கொண்டிருந்த முத்துராஜ் அதிர்ச்சியில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக படுகாயம் அடைந்த முத்துராஜ் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பராமரிப்பு பணியின் போது மின்வினியோகம் நிறுத்தப்பட்ட நிலையில் மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்தது எப்படி? என்று மின்வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, "மின்வினியோகம் நிறுத்தப்பட்டு இருந்தாலும் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் எங்காவது ஜெனரேட்டர் பயன்படுத்தி இருந்தால் அதன் மூலம் மின் கம்பியில் மின்சப்ளை வர வாய்ப்பு உள்ளது, அந்த வகையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனினும் இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தது. அதையும் மீறி இந்த சம்பவம் நடந்தது வேதனை அளிப்பதாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். உடனே அதிகாரிகளும் போலீசாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story