தறிகெட்டு ஓடிய கார் மோதி நடைபயிற்சி சென்ற 4 பேர் பலி


தறிகெட்டு ஓடிய கார் மோதி நடைபயிற்சி சென்ற 4 பேர் பலி
x

பர்கூர் அருகே தறிகெட்டு ஓடிய கார் மோதி 4 பேர் பலியானார்கள்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் அருகே தறிகெட்டு ஓடிய கார் மோதி 4 பேர் பலியானார்கள்.

நண்பர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர்கள் பாக்யராஜ் (வயது 40), சுஜித்குமார் (39), கண்டவீரவேல் (45), ஜெகதீசன் (38). இவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். இதில், ஜெகதீசன் என்பவர் அங்கிநாயனப்பள்ளி அடுத்த மேல்கொட்டாயில் டீக்கடை நடத்தி வந்தார். இவருடைய கடைக்கு வரும் மற்ற நண்பர்கள் அந்த பகுதியில் தினமும் மாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று மாலை நண்பர்கள் 4 பேரும் சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அங்கிநாயனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. மேலும் அந்த கார் சாலையில் நடந்து சென்ற நண்பர்கள் 4 பேர் மீதும் மோதி விட்டு அங்கிருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.

4 பேரும் சாவு

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பாக்யராஜ், சுஜித்குமார், கண்டவீரவேல் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஜெகதீசன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் சவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த ஜெகதீசனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெகதீசன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

டிரைவர் கைது

காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஓசூர் மூக்கண்டபள்ளியை சேர்ந்த தணிகைமலை (40) என்பதும், வேலூருக்கு சென்று விட்டு ஓசூருக்கு திரும்பி கொண்டிருந்ததும் தெரிய வந்தது.இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தணிகைமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பர்கூர் அருகே நடைபயிற்சி சென்ற 4 பேர் கார் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story