இலங்கை முதியவர் மயங்கி விழுந்து பலி
மண்டபத்தில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற இலங்கை முதியவர் மயங்கி விழுந்து பலியானார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் ஜெயினுலாபுதீன் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் நாகரத்தினம், பத்மநாபன், பிச்சை மற்றும் மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த இலங்கை நபர் யோகராஜா (வயது62) ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். நேற்று அதிகாலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது திடீரென இலங்கையை சேர்ந்த வயதான முதியவர் யோகராஜாவுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு படகிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இறந்து போன அவரின் உடலை நேற்று காலை மண்டபம் பகுதிக்கு மீனவர்கள் கொண்டு வந்தனர். தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மண்டபம் கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து போன இலங்கையை சேர்ந்த வயதான முதியவர் கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர். ஊட்டி முகாமில் தங்கி இருந்த அவர் கடந்த 2013-ம் ஆண்டு மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்து குடும்பத்துடன் தங்கி இருந்தார். பின்னர் 2018-ம் ஆண்டு குடும்பத்துடன் விமானம் மூலம் இலங்கை சென்றுள்ளார்.
தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மண்டபம் அகதிகள் முகாம் வந்து அவரது மகளுடன் வசித்து வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரது விசா கடந்த மே மாதமே முடிந்தும் 3 மாதத்திற்கு மேலாக மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.