மோட்டார் சைக்கிள் மோதி பகுதி நேர ஆசிரியர் சாவு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மோதி பகுதி நேர ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மோதி பகுதி நேர ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பகுதி நேர ஆசிரியர்
மொரப்பூர் அருகே உள்ள செட்ரப்பட்டியை சேர்ந்தவர் உமாபதி (வயது 56). இவர் கீழ் மொரப்பூர் அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவியும் கமலி, காவியா, கார்த்திகா ஆகிய 3 மகள்களும் உள்ளனர். உமாபதி உறவினர்களுடன் சேலம் கூட்டாத்துப்பட்டிக்கு துக்க நிகழ்ச்சிக்கு வேனில் சென்றார்.
பின்னர் அவர்கள் அனைவரும் மீண்டும் மாலை வேனில் வீடு திரும்பினர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் கூட்ரோட்டில் வேனை நிறுத்தி அவர்கள் அங்குள்ள கடைக்கு சாப்பிட சென்றனர். ஆசிரியர் உமாபதி டீ குடித்து விட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் உமாபதி மீது மோதியது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார்.
பரிதாப சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உமாபதியை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமாபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு சாலையை கடக்க முயன்றபோது விபத்தில் ஆசிரியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.