காவேரிப்பட்டணம் அருகே மலைப்பாம்பு கழுத்தை இறுக்கியதால் கிணற்றில் விழுந்து தொழிலாளி பலி
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே பிடிக்க முயன்றபோது மலைப்பாம்பு கழுத்தை இறுக்கியதால் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
10 அடி நீள மலைப்பாம்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஹள்ளியை அடுத்த குட்டப்பட்டி மேல்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. விவசாயி. இவரது விவசாய நிலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு புகுந்தது. அது அங்கு வந்த ஆட்டுக்குட்டி ஒன்றை பிடித்து விழுங்கியது.
மேலும் அந்த மலைப்பாம்பு விவசாய நிலத்தில் உள்ள 30 அடி ஆழ கிணற்றின் அருகே பதுங்கி இருந்தது. இதையடுத்து அந்த மலைப்பாம்பை பிடிப்பதற்காக சின்னசாமி, பனகமுட்லு கிராமத்தை சேர்ந்த பாம்பு பிடிக்கும் தொழிலாளி நடராஜன் (வயது 50) என்பவரை அழைத்து வந்தார்.
தொழிலாளி கழுத்தை இறுக்கியது
நடராஜன் நேற்று காலை கிணற்றின் அருகே பதுங்கி இருந்த மலைப்பாம்பை கைகளால் பிடித்தார். அப்போது அந்த மலைப்பாம்பு அவரின் கழுத்தை சுற்றி, இறுக்கியது. மேலும் கால், உடம்பையும் சுற்றி கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் மலைப்பாம்பிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் மலைப்பாம்பு அவரை விடாமல், மேலும் இறுக்கியது.
இதனால் நடராஜன் கால் இடறி மலைப்பாம்புடன் கிணற்றில் தவறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சின்னசாமி கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தண்ணீரில் மூழ்கி பலி
அதன்பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி தொழிலாளி நடராஜனை தேடினர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. மேலும் அவரை இறுக்கிய மலைப்பாம்பு கிணற்றின் ஓரத்தில் உள்ள குழியில் பதுங்கி இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து நடராஜனின் உடலை கயிறு கட்டி தீயணைப்பு துறையினர் மீட்டு, மேலே கொண்டு வந்தனர். காவேரிப்பட்டணம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிணற்றில் பதுங்கி இருக்கும் மலைப்பாம்பை பிடித்து அப்புறப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சோகம்
இறந்து போன நடராஜன் பாம்பு பிடிக்கும் தொழில் மற்றும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். நீண்ட நாட்களாக பாம்பு பிடிப்பதில் அனுபவம் உள்ள அவர், முதல் முறையாக மலைப்பாம்புவிடம் சிக்கி இறந்து விட்டார். அவருக்கு மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
மலைப்பாம்பு கழுத்தை இறுக்கியதால் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.