டியூசனுக்கு சென்ற இடத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி


டியூசனுக்கு சென்ற இடத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி
x

டியூசனுக்கு சென்ற இடத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கலெக்டர் விசாரணை நடத்தினார்.

ராமநாதபுரம்


டியூசனுக்கு சென்ற இடத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கலெக்டர் விசாரணை நடத்தினார்.

11 வயது சிறுவன்

ராமநாதபுரம் அருகே உள்ள காரிக்கூட்டம் பாத்திமா நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 38). ராமநாதபுரம் அத்தியூத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு எழில்மாறன் (11), யாழினி (9) என்ற 2 குழந்தைகள். இவர்கள் 2 பேரும் ராமநாதபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

அண்ணன், தங்கை 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஆசிரியை வீட்டிற்கு சென்று டியூசன் படித்து வந்துள்ளனர். இவர்களை கோபாலகிருஷ்ணன் தினமும் தனது மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விட்டுவிட்டு, திரும்ப அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல டியூசனுக்கு சென்றுள்ளனர். டியூசன் முடியும் நேரத்தில் பிள்ளைகளை அழைத்து வர கோபாலகிருஷ்ணன் சென்றிருந்தார். ஆனால், யாழினி மட்டும் வந்தாள். மகன் எழில் மாறனை காணவில்லை.

கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்பு

மற்ற மாணவர்களும் சென்றநிலையில் தனது மகன் மட்டும் வராததால், கோபாலகிருஷ்ணன் மாடிக்கு சென்று ஆசிரியை வீட்டில் மகன் குறித்து கேட்டுள்ளார். அதற்கு ஆசிரியையும், அவரின் கணவரும் எழில்மாறன் உள்ளிட்ட அனைவரும் அப்போதே சென்று விட்டார்களே என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் மகளிடம் கேட்டபோது அண்ணன் அப்போதே வந்துவிட்டான் என்று கூறியுள்ளார். எனவே அனைவரும் தேடினர். அப்போது மாணவி ஒருவர் கழிவறை பக்கம் சத்தம் கேட்டதாக கூறியுள்ளார். இதனால் அங்கு ஓடிச்சென்று பார்த்த கோபாலகிருஷ்ணன், கழிவுநீர் தொட்டியின் ஒரு பகுதி உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது மகன் உள்ளே விழுந்திருப்பானோ என்று கருதி 5 அடி ஆழ தொட்டிக்குள் உள்ளே இறங்கி பார்த்துள்ளார். மகன் உடல் தென்படவே அலறியடித்து உடனடியாக தூக்கி மேலே வந்து முதல்உதவி சிகிச்சை செய்து மகனை காப்பாற்ற முயன்றுள்ளார். பின்னர் அவனை தூக்கிக்கொண்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

கலெக்டர் விசாரணை

அங்கு பரிசோதித்த டாக்டர், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மகனை உடலை கையில் வைத்து கோபாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரித்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story