மோட்டார்சைக்கிள்-மொபட் மோதல்; காவலாளி சாவு
மாரண்டஅள்ளி அருகே மோட்டார்சைக்கிள் மொபட் மோதியதில் காவலாளி இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
மாரண்டஅள்ளி:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது40). இவர் அங்குள்ள வங்கியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் சந்திராபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (55) என்பவர் எதிரே மொபட்டில் வந்தார். அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பொன்னுசாமி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மாரண்டஅள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாரண்டஅள்ளி போலீசார் விரைந்து சென்று கோவிந்தனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த கோவிந்தனின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.