சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் 2 பெண்கள் சாவு
பேரிகை அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் 2 பெண்கள் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
ஓசூர்:
பேரிகை அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் 2 பெண்கள் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
வேன் கவிழ்ந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தீர்த்தம் பகுதியை சேர்ந்த 16 பெண்கள் உள்பட 19 பேர் பேரிகை பகுதியில் கூலி வேலைக்காக கடந்த 22-ந்தேதி சரக்கு வேனில் புறப்பட்டனர். இந்த வேனை தீர்த்தம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார். இதையடுத்து மாலையில் பேரிகை பகுதியில் வேலையை முடித்து விட்டு அனைவரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்ேபாது பேரிகை அருகே ராமன்தொட்டி என்ற பகுதியில் வந்தபோது, சரக்கு வேன் திடீரென நிலைதடுமாறி தறிகெட்டு ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி தீர்த்தம் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் (40), சீதாராம ரெட்டி என்பவரது மனைவி சின்னக்கா (60) ஆகியோர் இறந்தனர். மேலும் வேனில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற 13 பேரும் லேசானகாயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும் 2 பேர் சாவு
இதையடுத்து படுகாயம் அடைந்த 4 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த விபத்து குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வசந்தம்மா (50), தர்மபுரி அரசு மருத்துவமனையில் பர்வதம்மா (28) ஆகிய 2 பேரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.