திராவக கேன்களை மாற்றியபோது மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
அரூர் அருகே விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து திராவக கேன்களை மாற்றிய போது மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
அரூர்:
அரூர் அருகே விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து திராவக கேன்களை மாற்றிய போது மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி கவிழ்ந்தது
கடலூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து திராவக கேன்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி மும்பைக்கு புறப்பட்டது. இந்த லாரி தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த பையர்நாயக்கன்பட்டி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்து கொண்டு இருந்தது. அப்போது சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து அந்த லாரியில் இருந்த திராவக கேன்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கடலூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் அங்கு வந்தனர். அங்கு உரிய பாதுகாப்பு கருவிகளுடன் அவர்கள் திராவக கேன்களை மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மயங்கிய தொழிலாளி சாவு
அப்போது கடலூர் மாவட்டம் குமரபுரத்தை சேர்ந்த தொழிலாளி தண்டபாணி (வயது 48) திடீரென மயங்கி விழுந்தார். அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டப்பட்டி போலீசார் விரைந்து வந்து தண்டபாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.