லாரி மீது பஸ் மோதி இளம்பெண் சாவு
ஓசூரில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். டிரைவர் படுகாயம் அடைந்தார்.
ஓசூர்
ஓசூரில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். டிரைவர் படுகாயம் அடைந்தார்.
லாரி மீது பஸ் மோதல்
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக அரசு பஸ் ஒன்று கடலூர் நோக்கி சென்றது. இந்த பஸ்சை அரக்கோணத்தைச் சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் (வயது43) ஓட்டிச் சென்றார். கண்டக்டராக ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (51) பணியில் இருந்தார்.
இந்த பஸ், பெங்களூரு -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் பேரண்டப்பள்ளியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற லாரி திடீரென்று பிரேக் பிடித்து நின்றது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் லாரி மீது மோதியது.
இளம்பெண் சாவு
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பண்ருட்டி அருகே உள்ள மேலப்பாளையம் பஜனை மடத்தெருவை சேர்ந்த சக்திவேல் மகள் தீபிகா (22) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பஸ் டிரைவர் ஸ்ரீதர் படுகாயம் அடைந்தார். ஒரு சில பயணிகள் லேசான காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த டிரைவர் மற்றும் பயணிகளை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பயணிகள் சிகிச்சை பெற்று சென்றனர். டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீசார் விசாரணை
பின்னர் போலீசார் இறந்த தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கண்டக்டர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.