கிணற்றில் மூழ்கி சிறுவன்,கல்லூரி மாணவர் பலி


கிணற்றில் மூழ்கி சிறுவன்,கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் நீச்சல் பழக சென்ற சிறுவனும், கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் நீச்சல் பழக சென்ற சிறுவனும், கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

கல்லூரி மாணவர்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் திருப்பதி (வயது 19). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

பொங்கல் பண்டிகையையொட்டி விடுமுறையில் இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கெட்டூர் கிராமத்தில் உள்ள தனது மாமா சின்னசாமி வீட்டிற்கு வந்து இருந்தார். மாணவர் திருப்பதி, தனது மாமா மகன் ஹரிகரனுடன் (10) கெட்டூர் செம்மண்குழிகொட்டாய் பகுதியில் உள்ள கிணற்றிற்கு நேற்று முன்தினம் மாலை சென்றார்.

2 பேரும் சாவு

அப்போது திருப்பதி, சிறுவன் ஹரிகரனுக்கு நீச்சல் சொல்லி தருவதாக கூறி 2 பேரும் கிணற்றில் இறங்கினர். நீச்சல் பழகிய போது திடீரென 2 பேரும் கிணற்றில் மூழ்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து ராயக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், கிருஷ்ணகிரி தாலுகா போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி திருப்பதி மற்றும் ஹரிகரன் ஆகியோரை தேடினர். அப்போது அவர்கள் 2 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களையும் தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

சோகம்

இதைத்தொடர்ந்து போலீசார், இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான சிறுவன் ஹரிகரன் கெட்டூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு வந்த இடத்தில் கிணற்றில் நீச்சல் பழக சென்றபோது சிறுவனும், கல்லூரி மாணவரும் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story