வடமாநில பெண் மர்ம சாவு
மத்திகிரி அருகே வடமாநில இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்திகிரி
மத்திகிரி அருகே வடமாநில இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அழுகிய நிலையில் பெண் பிணம்
சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா தாலுகா பகுதியை சேர்ந்தவர் சஸ்பால். இவரது மனைவி ராஜாந்தி டிர்க்கி (வயது 24). இவர் ஓசூர் அருகே தளி சாலையில் பேளகொண்டப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது வீட்டுக்கதவு கடந்த 2 நாட்களாக திறக்காமல் மூடியே இருந்தது.
மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் வீட்டின் உரிமையாளர் மகேஷ்பாபுவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் ராஜாந்தி டிர்க்கி பிணமாக கிடப்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
மேலும் அவரது கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கிய நிலையில் இருந்தது. துப்பட்டாவின் ஒரு பகுதி ராஜாந்தி டிர்க்கி கழுத்திலும், மற்றொரு பகுதி வீட்டில் மேற்கூரையிலும் இருந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து 2 நாட்களுக்கும் மேல் இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ராஜாந்தி டிர்க்கி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிகாய்குமார் என்பவருடன் சேர்ந்து இருந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்ததும், அவருடன் தங்கிய நபர் தலைமறைவாகியதும் தெரிய வந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.