மொபட் மீது அரசு பஸ் மோதி பெண் பலி


மொபட் மீது அரசு பஸ் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:45 PM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே மொபட் மீது அரசு பஸ் மோதி பெண் பலியானார். தாய்-மகன் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே மொபட் மீது அரசு பஸ் மோதி பெண் பலியானார். தாய்-மகன் படுகாயம் அடைந்தனர்.

பஸ் மோதி பெண் சாவு

ஊத்தங்கரை அருகே உள்ள பனமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கூலித்தொழிலாளி. இவரது மனைவி சென்னம்மாள் (வயது47). இவர்கள் கீழ்குப்பம் பஸ் நிலையம் எதிரே பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தனர். சென்னம்மாள் கம்பைநல்லூரில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக நேற்று காலை மருமகள் அல்லி (29), பேரன் சபரி (2) ஆகியோருடன் மொபட்டில் நொச்சிப்பட்டி வழியாக நாகமரத்து பள்ளம் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது கல்லாவியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் மொபட்டுடன் 3 பேரும் கீழே விழுந்தனர். அப்போது சென்னம்மாள் மீது பஸ் சக்கரம் ஏறியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மருமகள், அல்லி, பேரன் சபரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தாய்-மகன் 2 பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கல்லாவி போலீசார் விரைந்து சென்று இறந்த சென்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கல்லாவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story