மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
திருப்பூர்



ஊத்துக்குளி அருகே சாய்ந்த இரும்பு கேபிள் கம்பத்தை நிமிர்த்திய போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர் பலி

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி ஊராட்சி சென்னிமலைபாளையம் புது காலனியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது52). இவர் அப்பகுதியில் உள்ள கேபிள் ஆபரேட்டரிடம் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததின் காரணமாக செங்கப்பள்ளியில் இருந்து சென்னிமலைபாளையம் செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான ஆயில் மில் அருகே கேபிள் கம்பமானது சாய்ந்த நிலையில் இருந்துள்ளது.

அவ்வழியாக வந்த பெருமாள் நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பூபதி (27) மற்றும் முருகன் (45) ஆகிய இருவரையும் உதவிக்கு அழைத்து 3 பேரும் சேர்ந்து கேபிள் கம்பத்தை நேர் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்சார கம்பியில் கேபிள் கம்பம் உயரழுத்த மின்கம்யில் உரசியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் ரமேஷ் பூபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

2 பேருக்கு சிகிச்சை

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெருமாள், முருகன் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரமேஷ் பூபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story