கடலில் மூழ்கி பெண் சாவு;3 பெண்களுக்கு தீவிர சிகிச்சை
ராமநாதபுரம் அருகே கடலில் இறங்கி குளித்தபோது அலையில் சிக்கி பெண் பலியானார். மேலும் 3 பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் அருகே கடலில் இறங்கி குளித்தபோது அலையில் சிக்கி பெண் பலியானார். மேலும் 3 பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலில் குளித்தனர்
ராமநாதபுரம் அருகே உள்ள தேர்போகி ஊராட்சிக்கு உட்பட்ட மாடசாமி கோவில் கிராமத்தை சேர்ந்த சிலர், நேற்று அருகில் உள்ள ஆற்றங்கரை கடற்கரை பகுதிகளை சுற்றி பார்க்க சென்றனர்.
வாடகை வாகனத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த கவிதா (வயது 32), மங்களேசுவரி (35), நிவேதா (16), மனிஷா (28), மேகலா (32), புவனேசுவரி (40), சாமுண்டீசுவரி (32), கீதா (28), சரஸ்வதி (55), சிவனம்மாள் (60) மற்றும் 8 குழந்தைகள் ஆற்றங்கரை கடற்கரைக்கு சென்றிருந்தனர்.
அங்கு சில பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கைகளை கோர்த்தபடி கடலுக்குள் இறங்கி குளித்தனர்.
பெண் சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக கடல் அலையில் அவர்கள் சிக்கி தத்தளித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஓடிச்சென்று 7 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் கவிதா மட்டும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மீட்கப்பட்டவர்களில் மங்களேசுவரி, நிவேதா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மனிஷா ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது தரீக்கள் அமீன், ஏட்டுகள் ஆனந்தகுமார், பால்ராஜ், கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த கவிதாவின் கணவர் செல்வகுமார், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.