சரக்குவேன் கவிழ்ந்து தொழிலாளி பலி


சரக்குவேன் கவிழ்ந்து தொழிலாளி பலி
x

ஏற்காடு மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து தொழிலாளி பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம்

ஏற்காடு

ஏற்காடு மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து தொழிலாளி பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சரக்கு வேன்

சேலம் மாவட்டம், ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி ேநற்று முன்தினம் கோவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆடல் பாடல் குழுவினர் சரக்கு வேனில் இசைக்கருவிகள் ஏற்றிக்கொண்டு ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்திற்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நிகழ்ச்சி முடிந்த நிலையில் ஆடல் பாடல் குழுவினர் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ஸ்பீக்கர் பாக்ஸ் ஏற்றிக்கொண்டு மைக் செட் தொழிலாளர்கள் 6 பேர் சரக்கு வேனில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். வேனை எடப்பாடி அருகே உள்ள பள்ளிப்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 28) ஓட்டினார்.

கவிழ்ந்து விபத்து

காலை 5 மணி அளவில் குப்பனூர் மலைப்பாதையில் ஆத்துப்பாலம் அருகே சென்ற போது சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது மலைப்பாதை வளைவில் சாலையோரத்தில் உள்ள தேக்கு மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சரக்கு வேனில் பயணம் செய்த மைக் செட் தொழிலாளியான ஓமலூர் அருகே உள்ள கே.ஆா்.தோப்பூரை சேர்ந்த பழனிசாமி மகன் பெரியசாமி (32) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் டிரைவர் மோகன்ராஜ், சரக்கு வேனில் வந்த சக தொழிலாளர்களான எடப்பாடி அருகே உள்ள கோணசமுத்திரம் பகுதியை சேர்ந்த தங்கராஜ், தேவராஜ், சக்திவேல், ராஜா ஆகியோர் லேசான காயங்களுடன் ஏற்காடு, வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

மீட்பு பணி

அதே போல் விபத்தில் படுகாயம் அடைந்த கோணசமுத்திரத்தை சேர்ந்த துரைசாமி மகன் செல்வம் (28) மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்்கு விரைந்து சென்று பொக்்லைன் எந்திரம் மூலம் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும் விபத்தில் பலியான பெரியசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story