சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி
திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலியானார். மற்றொருவர் காயமடைந்தார்.
திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலியானார். மற்றொருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொத்தனார் பலி
திருப்பூர் கண்ணகி நகர் 60 அடி ரோட்டில் முத்துராஜா (வயது 40) என்பவருக்கு சொந்தமான பிரிண்டிங் நிறுவன கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் நுழைவுவாசலில் உள்ள இரும்பு கதவை அகற்றிவிட்டு, ஷட்டர் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.
இந்த பணியில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த கொத்தனாரான ராமமூர்த்தி (50), சித்தாளாக பிரவீன் (22) ஆகியோர் ஈடுபட்டனர். மதியம் 12 மணி அளவில் கட்டிடத்தின் மேல் பகுதி சுவரை ராமமூர்த்தி இடித்ததாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக சுவரின் ஒரு பகுதி இடிந்து ராமமூர்த்தி தலையில் விழுந்து அமுக்கியது. இதில் தலை உடைந்து ரத்த வெள்ளத்தில் ராமமூர்த்தி மயங்கினார். இந்த விபத்தில் வாலிபர் பிரவீனுக்கும் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி இருந்த ராமமூர்த்தியை மீட்டனர். ஆனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரவீனை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ராமமூர்த்தியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.