ஓசூர், பேரிகை பகுதிகளில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு
ஓசூர்:
ஓசூர், பேரிகை பகுதிகளில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் டிரைவர் உள்பட 3 பேர் இறந்தனர்.
டிராக்டர் டிரைவர்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே எலுமதியங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது27). டிராக்டர் டிரைவர். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே சீக்கனபள்ளியில் உள்ள ஒரு கல்குவாரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் டிராக்டரில் கல் பாரம் எற்றிக்கொண்டு, குவாரியில் இருந்து வெளியே வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் அய்யனார் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி
சூளகிரி அண்ணா நகரை சேர்ந்தவர் நாகராஜ். கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர், மோட்டார் சைக்கிளில் பேரிகையில் இருந்து பாகலூர் நோக்கிச் சென்றார். சொன்னேபுரம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற ஒரு டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் நாகராஜ் கீழே விழுந்தார். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேன், நாகராஜ் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி
ஓசூர் அருகே ஜொனபண்டா கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தப்பா (45). விவசாயி. இவர் நேற்று முன்தினம் கரகம்மா கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி, கோவிந்தப்பா மீது மோதியது. இந்த விபத்தில், படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.