மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அரசு ஊழியர் சாவு
மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா புதிய புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். திருவண்ணாமலையில் ஒரு வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தார்.
4-ந்தேதி இரவு 11 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மோட்டார் சைக்கிள் சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.