எடப்பாடியில் தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்த பெண் சாவு உறவினர்கள் முற்றுகை-சாலைமறியல்


எடப்பாடியில்  தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்த பெண் சாவு  உறவினர்கள் முற்றுகை-சாலைமறியல்
x

எடப்பாடியில் தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்த பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதுடன், சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

சேலம்

எடப்பாடி,

அறுவை சிகிச்சை

ஜலகண்டாபுரம் சவுரியூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 31). இவருடைய மனைவி சங்கீதா (28). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சங்கீதாவிற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு எடப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர் 2 வாரங்கள் கழித்து அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மீண்டும் அதே ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

அப்போது அவரை பரிசோதித்த டாக்டர், சங்கீதாவின் வயிற்றில் ரத்தம் கட்டி உள்ளது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் 2-வது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கீதாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளதால் அதே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு 3-வது முறையாக அறுவை சிகிச்சை செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உடலை வாங்காமல் டாக்டரை கைது செய்யக்கோரி ஆஸ்பத்திரி முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) இளமுருகன், தாசில்தார் லெனின், துணை தாசில்தார் மகேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், சந்திரலேகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கர், அமிர்தலிங்கம் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

சாலைமறியல்

மேலும் முற்றுகையில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சங்கீதாவின் உறவினர்கள் இரவு 9 மணியளவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மறியல்போராட்டத்தை அடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தையை ஏற்று மறியலை கைவிட்டனர். அதேநேரத்தில் உறவினர்கள், சங்கீதாவின் உடலை வாங்க மறுத்து விட்டனர். மேலும் அவரது மரணத்துக்கு காரணமான டாக்டரை கைது செய்யக்கோரியும், ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்க கோரியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, 'இதற்கு முன்பாக இதே டாக்டர் அறுவை சிகிச்சை செய்ததில் 3 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்கள்.

இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story