ஓ.பன்னீர்செல்வம் தாயார் மரணம்:பெரியகுளத்தில் இன்று இறுதிச்சடங்கு


ஓ.பன்னீர்செல்வம் தாயார் மரணம்:பெரியகுளத்தில் இன்று இறுதிச்சடங்கு
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

தேனி

ஓ.பன்னீர்செல்வம் தாயார்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(வயது 95). முதுமை காரணமாக இவருக்கு கடந்த மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதனால், கடந்த 22-ந்தேதி அவர் மீண்டும் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரை நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்வையிட்டார். உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

மரணம்

இந்நிலையில் நேற்று பழனியம்மாள் நாச்சியார் உடல்நிலை கவலைக்கிடமானது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.ஆனால் முதுமை காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரை வீட்டுக்கு கொண்டு செல்ல அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கிடையே செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் தெற்கு அக்ரகாரம் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு நேற்று இரவு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் பழனியம்மாள் நாச்சியாரின் உயிர் பிரிந்தது.

இந்த சம்பவம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இவருடைய இறுதிச்சடங்கு பெரியகுளத்தில் உள்ள வீட்டில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் தந்தை பெயர் ஓட்டக்காரத்தேவர். ஓட்டக்காரத்தேவர்-பழனியம்மாள் நாச்சியார் தம்பதிக்கு 5 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 9 பிள்ளைகள். அதில் ஓ.பன்னீர்செல்வம் மூத்த மகன் ஆவார்.


Related Tags :
Next Story