காதுகளில் இன்னும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது: ரெயில் விபத்தில் உயிர் தப்பிய பயணி பேட்டி
என் காதுகளில் இன்னும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது என ஒடிசா ரெயில் விபத்தில் உயிர் தப்பிய சென்னை பயணி தெரிவித்தார்.
சென்னை,
ஒடிசா ரெயில் விபத்தில் சென்னை, காசிமேட்டை சேர்ந்த தரணி என்பவருக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. சிறப்பு ரெயில் மூலம் சென்னை திரும்பிய அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரெயில் விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத தரணியை அவரது உறவினர்கள் தேற்றி வருகின்றனர். ரெயில் விபத்து குறித்து தரணி கூறியதாவது:-
மரண ஓலம்
டிரைவரான நான் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அடிக்கடி மேற்கு வங்காளம் சென்று வருவேன். அந்த வகையில், மேற்கு வங்காளம் சென்றுவிட்டு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். முன்பதிவு பெட்டி என்றாலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மாலை 6.50 மணியளவில் திடீரென பலத்த சத்தம் கேட்டது.
ஒவ்வொரு பெட்டியும் தூக்கி வீசப்பட்டது. நான் இருந்த பெட்டியும் தூக்கி வீசப்பட்டது. இதில், எனக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் என்ன நடந்ததே என்று தெரியவில்லை.சிறிது நேரத்திலேயே பாதி மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன். பின்னர், சுதாகரித்துக்கொண்டு மேலே ஏறி வந்து பார்த்தேன். ரெயில் பெட்டிகள் சுக்குநூறாக நொறுங்கி, சிதறிக் கிடந்தது. என்னால் முடிந்த அளவுக்கு சிலரை காப்பாற்றினேன். இந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் இன்னும் மீண்டு வர முடியவில்லை. குழந்தைகளின் அழுகுரல்களும், மரண ஓலங்களும்தான் இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது.
உடல் அளவில் நான் தேறி வந்தாலும், மனதளவில் என்னால் தேறி வர முடியவில்லை. இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.