குன்னூர் சப்-கலெக்டருக்கு கொலை மிரட்டல்


குன்னூர் சப்-கலெக்டருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தை ஆய்வு செய்ய சென்ற போது, குன்னூர் சப்-கலெக்டருக்கு கொலை மிரட்டல் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நீலகிரி

ஊட்டி,

நிலத்தை ஆய்வு செய்ய சென்ற போது, குன்னூர் சப்-கலெக்டருக்கு கொலை மிரட்டல் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சப்-கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் 6-வது மைல் பகுதியில் இருந்து அதிகரட்டி செல்லும் சாலை ராமகிருஷ்ணா சந்திப்பு பகுதியில் அரசுக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 25 சென்ட் நிலம் கால்நடைத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், அதுகுறித்து ஆய்வு செய்வதற்காக குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் சதீஷ், வருவாய் ஆய்வாளர் சுகந்தி, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர்.

அப்போது அதிகரட்டி பகுதியை சேர்ந்த நீதி என்ற ஈஸ்வரன், முருகேசன் ஆகிய 2 பேர் சப்-கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நிலத்தை பார்வையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் இது எங்களுக்கு சொந்தமான இடம் என்றும், உடனடியாக இடத்தை காலி செய்யுங்கள் என்று ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

2 பேர் மீது வழக்கு

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தநிலையில் போலீசார் வருவார்கள் என்ற பயத்தில் ஈஸ்வரன், முருகேசன் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் லவ்டேல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் (294) (பி), அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் (353), கொலை மிரட்டல் (506) (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசன், ஈஸ்வரன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். சப்-கலெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story