வியாபாரிக்கு கொலை மிரட்டல்:செல்போன் கடைக்காரர்கள் 2 பேர் கைது
தேனியில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த செல்போன் கடைக்காரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் தற்போது தேனி சுப்பன் தெருவில் வசித்தபடி, பழைய பஸ் நிலையம் எதிரே செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவருடைய கடைக்கு செல்போன் கடைக்காரர்கள் சிலர் வந்து, சில்லரையில் பொருட்கள் விற்பனை செய்வதால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், வடமாநில வியாபாரிகள் சிலருடன் சென்று தேனி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார். அதன்பேரில் பழைய பஸ் நிலையம் பகுதியில் செல்போன் கடைகள் நடத்தி வரும் ராஜா, ராஜ், அரசன், பெருமாள், ரகு, பிரகதீஷ் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், பெருமாள் (29), பிரகதீஷ் (32) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.