பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு
சங்கரன்கோவிலில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பகுதியில் ஒரு பஞ்சாயத்து தலைவரின் செயல்பாட்டை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அப்போது அவர்களிடம் இருந்த சுவரொட்டிகளை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட சுவரொட்டிகளை திருப்பி கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த போலீஸ் ஏட்டுவுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் இதுதொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாளிடம் நாம் தமிழர் கட்சியினர் கேட்டபோது வாக்குவாதம் முற்றியது. அப்போது நாம் தமிழர் கட்சியினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், ஏட்டு ராசாத்தி ஆகியோர் அளித்த புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொகுதி செயலாளர் பீர்முகமது, தொகுதி தகவல் தொழில்நுட்பத்துறை பிரிவு மணிகண்டன், அச்சக உரிமையாளர் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.