ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் அ.தி.மு.க. கவுன்சிலர் மீது வழக்கு
ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக அ.தி.மு.க. கவுன்சிலர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே உள்ள புள்ளப்பநாய்க்கன்பாளையம் ஊராட்சி தலைவராக பாஸ்கரனும், துணைத்தலைவராக பிரகாசும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் பங்களாப்புதூர் போலீசுக்கு ஊராட்சி தலைவர் பாஸ்கரன், ஆன்லைன் மூலம் புகார் மனு அனுப்பி உள்ளார். அந்த புகாரில், 'டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக ஏளூரை சேர்ந்த தர்மன் என்கிற நடராஜன் உள்ளார். இவர் புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி வழியாக லாரியில் தொடர்ந்து மண் கடத்தி வருகிறார். மண் கடத்தலில் ஈடுபட்டதால் கிராம சாலைகள் பழுதடைந்தது. இதனால் நானும், துணைத்தலைவர் பிரகாசும் சேர்ந்து அனுமதி பெறாமல் மண் எடுத்து செல்ல வேண்டாம் என்று அந்த வழியாக சென்ற லாரி டிரைவரிடம் கூறினோம். இதனால் ஆத்திரமடைந்த தர்மன், எனக்கும், பிரகாசுக்கும் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்,' என குறிப்பிட்டிருந்தார்.
இதன் பேரில் பங்களாப்புதூர் போலீசார் அ.தி.மு.க. கவுன்சிலர் தர்மன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பாஸ்கரனும், பிரகாசும் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.