சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்
சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்தநிலையில் நாகர்கோவில் கோட்டார் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் செட்டிகுளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சைமன்நகரை சேர்ந்த வியாபாரியான டிலன் (வயது 50) என்பவர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் ஒரு வழிப்பாதையில் வந்தார். எனவே அவருக்கு போலீசார் அபாரதம் விதித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த டிலன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகனை தகாத வார்த்தைகள் பேசியதுடன் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டிலன் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.