இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மதுரை வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேனியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், 'நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். மதுரை அண்ணாநகர் ஆவின்நகரை சேர்ந்த அஜய்குமார் (24) என்பவர் என்னை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நான் கொடுத்த புகாரின்பேரில் அவர் மீது ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அந்த வழக்கை வாபஸ் பெறக்கோரியும், வாபஸ் பெறாவிட்டால் என்னையும், எனது தம்பியையும் கொலை செய்து விடுவதாக இன்ஸ்டாகிராம் மூலம் எனக்கு மிரட்டல் விடுத்தார். மேலும், அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார்' என்று கூறியிருந்தார். அதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், தேனி அனைத்து மகளிர் போலீசாரும் இந்த சம்பவம் குறித்து அஜய்குமார் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.