கடன் இல்லாத மாநகராட்சி; தமிழகத்தில் முதலிடத்தை பிடித்தது தஞ்சை


கடன் இல்லாத மாநகராட்சி; தமிழகத்தில் முதலிடத்தை பிடித்தது தஞ்சை
x

கடன் இல்லாத மாநகராட்சி; தமிழகத்தில் முதலிடத்தை பிடித்தது தஞ்சை

தஞ்சாவூர்

கடன் இல்லாத மாநகராட்சி பட்டியலில் தஞ்சை மாநகராட்சி முதலிடத்தை பிடித்துள்ளது. இனி வரும் வருவாயை கொண்டு தஞ்சை மாநகராட்சி மேலும் வளர்ச்சி அடையும் என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

மாநகராட்சி கூட்டம்

தஞ்சை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

துணை மேயர் அஞ்சுகம் பூபதி: 51-வது வார்டில் விரிவாக்க பகுதிகளில் சில இடங்களில் காலியாக உள்ள மனைகளில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வருகின்றன. எனவே காலிமனையில் உள்ள செடிகளை அகற்ற உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி உத்தரவிட வேண்டும்.

தரைக்கடை அனுமதி

மண்டலக்குழு தலைவர் ரம்யா (தி.மு.க.) :- மாதவராவ் நகரில் இருந்து அண்ணாநகர் வரை மழைநீர் வடிகால் ஏற்படுத்தி தர வேண்டும்.

மேத்தா (தி.மு.க.) :- சதய விழா ஏற்பாடுகளை சிறப்பாக மாநகராட்சி செய்ய வேண்டும்.எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன் (அ.தி.மு.க.) :- தீபாவளி நேரத்தில் தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டன. இதற்கு மாநகராட்சி அனுமதி கொடுக்கவில்லை என கூறியது. அப்போது எப்படி இந்த கடைகள் அமைக்கப்பட்டன. மாநகராட்சி இடத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பணிகள் சரிவர நடப்பதில்லை

கோபால் (அ.தி.மு.க.) :- நகர்புறத்தில் உள்ள வியாபாரிகள் பாதிக்காத வகையில் கடைகள் ஒதுக்க வேண்டும். எனது வார்டில் பணிகள் சரிவர நடப்பதில்லை. உடனடியாக அனைத்து பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு உடனே முடிக்க வேண்டும்.

சரவணன் (அ.தி.மு.க.) :- சேவப்பநாயக்கன்வாரி 3 தெருவில் சாலை வசதி இல்லாததால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. எனவே அதனை தடுக்க சாலை வசதி அமைத்து தர வேண்டும்.

குதிரைகள் தொல்லை

சர்மிளாதேவி ராஜா (தி.மு.க.) :- 48-வது வார்டில் முத்தமிழ்நகரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் 3 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டள்ளது. மேலும் 6 இடங்களில் கேமரா பொருத்த வேண்டும். ஈஸ்வரி நகர் மெயின்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

கேசவன் (அ.தி.மு.க.) :- சாலைகள் மோசமாக உள்ளன. அதனை சீரமைக்க வேண்டும். சாலைகளில் குதிரைகள் தொல்லை அதிகமாக உள்ளதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. மழை காலம் தொடங்க உள்ளதால் மழை பெய்யும் நேரத்தில் தண்ணீர் தேங்கினால் அதனை உடனுக்குடன் வெளியேற்ற தேவையான கருவிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

காந்திமதி (அ.தி.மு.க.) :- கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோவில் அருகே உள்ள தற்காலிக மீன்மார்க்கெட்டால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே வேறு இடத்தில் மீன் மார்க்கெட்டுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும். மேலும் இந்த பகுதியில் சாலைகள் பழுதடைந்துள்ளது. அதனையும் சீரமைக்க வேண்டும்.

டெய்சிராணி (தி.மு.க.) :- எனது வார்டில் 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடன் இல்லாத மாநகராட்சி

ஜெய்சதீஷ் (பா.ஜ.க.) :- எனது வார்டில் பாதாள சாக்கடை ஆழ்நுளை குழி 10 ஆண்டுகளுக்குப்பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில இடங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்காக தோண்டப்பட்ட இடங்களில் பணி முடிந்தும் சரிவர மூடப்படாததால் சாலை சேதமடைந்துள்ளது. அதனை சரி செய்ய வேண்டும்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளில் முதன்முதலாக தஞ்சை மாநகராட்சி தான் கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது. இதுவரை மாநகராட்சி சார்பில் இருந்த அனைத்து கடன்களும் அடைக்கப்பட்டு விட்டன. மாநகராட்சி கடைகள், டெண்டர் வெளிப்படை தன்மையாக நடந்ததால் மாநகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தது. இன்னும் பல்வேறு வணிக வளாகங்கள் கட்டப்பட்டு பொது ஏலமிடப்பட உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு இன்னும் அதிக வருவாய் கிடைக்கும். அப்போது மாநகராட்சி மேலும் வளர்ச்சி அடையும். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்"என்றார்.


Next Story