நாகா்கோவிலில் காவலாளியை ஏமாற்றி ஜவுளி கடையில் கார் திருட்டு; பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் உள்பட 2 பேர் கைது


நாகா்கோவிலில் காவலாளியை ஏமாற்றி ஜவுளி கடையில் கார் திருட்டு; பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் காவலாளியை ஏமாற்றி ஜவுளி கடையில் காரை திருடியதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் காவலாளியை ஏமாற்றி ஜவுளி கடையில் காரை திருடியதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரபல ஜவுளிக்கடை

மாங்காடு மெதுகும்மல் செம்மான்விளையை சேர்ந்தவர் பென்சாம் (வயது 69). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். நேற்று முன்தினம் இவர் தனது காரில் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல ஜவுளி கடையில் துணி எடுக்க வந்தார். அப்போது தனது காரை கடையில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தினார். அங்கு காரை நிறுத்தியதற்கான டோக்கனையும் பெற்ற அவர் காவலாளியிடம் கார் சாவியை ஒப்படைத்தார். பின்னர் கடையில் துணியை எடுத்து விட்டு மீண்டும் காரை எடுக்க வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு நிறுத்தியிருந்த காரை காணவில்லை. இதுகுறித்து பென்சாம் காவலாளிகளிடம் கேட்டார். உடனே அவர்களும் காரை தேடினர். வாகன நிறுத்தத்தில் உள்ள கார் திருடு போனது எப்படி? என தெரியாமல் அவர்கள் பரிதவித்தனர்.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த நேசமணி நகர் போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கார் திருட்டு

அப்போது பென்சாம் காரை 2 வாலிபர்கள் திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. பின்னர் நடத்திய விசாரணையில், காரை திருடிய நபர் ஏற்கனவே அதே துணிக்கடையில் வேலை பார்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரான இறச்சகுளத்தை சேர்ந்த ராஜா (28) மற்றும் அவரது நண்பர் ராஜன் (22) என்பது தெரியவந்தது.

பென்சாம் காரை நிறுத்தியதும் அங்கிருந்த ராஜா அதை கவனித்து அந்த காரின் நம்பரை குறித்து கொண்டார். ஏற்கனவே அந்த ஜவுளிக் கடையில் வேலை பார்த்த பழக்கத்தில் காவலரிடம் ராஜா பேச்சு கொடுத்து, அங்கிருந்த ஒரு டோக்கனை திருடியுள்ளார். பின்னர் அந்த டோக்கனில் பென்சாமின் கார் நம்பரை எழுதி வைத்து கொண்டார். அந்த காவலாளி டீக்குடிக்க அருகே உள்ள கடைக்கு சென்றார்.

2 வாலிபர்கள் கைது

அப்போது அங்கிருந்த மற்றொரு காவலாளி பணியில் இருந்தார். அந்த காவலாளிக்கு ராஜா அங்கு வேலை பார்த்த விஷயம் தெரியாது. அதனை தனக்கு சாதகமாக்கி கொண்டு தான் வைத்திருந்த டோக்கனை காண்பித்து பென்சாம் காரை தனது கார் என கூறி எடுத்து சென்றார். இதற்கு அவருடைய நண்பர் ராஜனும் உடந்தையாக இருந்துள்ளார். காவலாளியும் டோக்கனை பெற்று கொண்டு காரை வெளியே செல்ல அனுமதித்தார் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று வடசேரி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் காரில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜவுளி கடையில் காரை திருடிய ராஜா, ராஜன் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து காரை மீட்டனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story