பள்ளிகளில் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்குங்கள்
பள்ளிகளில் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்குங்கள்
போடிப்பட்டி
பள்ளிகளில் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோய் எதிர்ப்பாற்றல்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
ஓடி விளையாடு பாப்பா என்று உரக்கச் சொன்ன பாரதியை இன்று இளைய தலைமுறை மறந்து விட்டதோ என்ற ஐயம் எழுகின்றது.உட்கார்ந்த இடத்தில் மொபைல் போன்கள், கணினிகள் போன்றவற்றின் மூலம் விளையாடும் விளையாட்டுக்களே அவர்களின் விருப்பமாக உள்ளது.புழுதியில் புரண்டு விளையாடிய போது நம் உடலில் இருந்த நோய் எதிர்ப்பாற்றல் இன்று பொத்திப் பொத்தி வளர்க்கும் பிள்ளைகளிடம் இல்லை.காலை எழுந்தவுடன் படிப்பு...மாலை முழுவதும் விளையாட்டு என்ற நிலை இன்று இல்லை. காலை முதல் இரவு வரை படிப்பு என்ற கற்கும் எந்திரங்களாகவே குழந்தைகள் உருவாக்கப்படுகின்றனர்.நல்லா படிச்சா தான் நல்ல வேலைக்கு போகமுடியும்.கை நிறைய சம்பாதிக்க முடியும் என்பதே பெற்றோர் குழந்தைகளுக்குத்தரும் வழிகாட்டலாக உள்ளது. இதனால் விளையாட நேரம் ஒதுக்காத பல குழந்தைகளுக்கு ஒபிஸிட்டி எனப்படும் உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது.மேலும் அவர்கள் வளர வளர பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
வாழ்க்கை கல்வி
உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் விளையாட்டில் ஈடுபட பெற்றோர் குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும்.இதுபோல மாணவர்களின் உடல் மற்றும் மன நலனைக் கருத்தில் கொண்டு தான் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.இதற்கென பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரும் நியமிக்கப்படுகிறார்கள்.
பெரும்பாலும் இவர்கள் மாணவர்களை வரிசையில் நிற்க வைப்பதற்கும், கூட்டமாக நிற்காமல் விரட்டுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். விதிகளின்படி விளையாட்டுக்கென ஒதுக்கப்படும் நேரத்தை, ஏதோ ஒரு பாடவேளையாக மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.இதனால் மாணவர்கள் தொடர்ச்சியாக பாடங்களை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளினால் மாணவர்களின் கல்வியில் மட்டும் அல்லாமல் மன உறுதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் மனம் மற்றும் உடல் ரீதியாக உறுதியானவர்களாக இருக்க விளையாட்டு அவசியமாகிறது. எனவே பள்ளிகளில் கண்டிப்பாக விளையாட்டுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.மேலும் மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையிலான நீதி போதனைகளை கற்பிக்கும் வகுப்புகளும், மாணவர்களை மன ரீதியாக உறுதியாக்கும் வகையிலான உளவியல் வகுப்புகளும் நடத்தப்பட வேண்டும்.அத்துடன் மாணவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறை வாழ்க்கைக் கல்வியை கற்பிக்கும் வகையிலான பாடத்திட்டங்களும், கைத்தொழில் கற்றுக் கொள்ளும் வகையான பாடங்களும் நடத்துவது அவர்களின் எதிர்காலத்துக்கு உறுதுணையாக இருக்கும்'என்று அவர்கள் கூறினர்.
----