கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட முடிவு


கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட முடிவு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருப்பத்தூர்

செயற்குழு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் திருவண்ணாமலை சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் க.தேவராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் டி.கே.மோகன், ஏ.சம்பத்குமார் முன்னிலை வகித்தனர். அவைத் தலைவர் ஆனந்தன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசினார்.

கருணாநிதி நூற்றாண்டு விழா

கூட்டத்தில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி தொடங்கும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, ஒரு ஆண்டு முழுவதும் கொண்டாடுவது. பட்டி மன்றம், கவியரங்கம், பொதுக்கூட்டங்கள், ஆகியவை நடத்தியும், கருணாநிதியின் சிறப்புக்களை மாணவர் சமுதாயம் அறியும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி நடத்தியும், கிரிக்கெட், கபடி போன்ற விளை யாட்டுகளை நடத்தியும், ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் கிராம கிளைகள் முழுவதும் கொண்டாடுவது.

மாவட்டம் முழுவதும், தி.மு.க. கொடி ஏற்றி. ரத்த தானம், கண்தானம், உணவு வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், இனிப்பு வழங்குதல் உள்ளிட்டவை நடத்திட தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டு கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, வில்வநாதன், நகர செயலாளர் ராஜேந்திரன், வி.எஸ்.சாரதி குமார், மாவட்ட பொருளாளர் கே.பி.ஆர். ஜோதிராஜன், ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் உள்பட பலர் பேசினார்கள்.

கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

நலத்திட்ட உதவி

ஜூன் மாதம் 3-ந் தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருப்பத்தூரில் 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றவும், மூத்த தி.மு.க. உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கவும், திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு இடம் வாங்கி புதிய கட்டிடம் கட்டவும், கருணாநிதி சிலை வைக்கவும், பட்டிமன்றம், கவியரங்கம், இசையரங்கம், நடனம் என அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் நடத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல் நன்றி கூறினார்.


Next Story