சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க முடிவு


சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க முடிவு
x

வடக்கு விஜயநாராயணத்தில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு உண்ணாவிரதம் இருந்ததையடுத்து சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் வடக்கு விஜயநாராயணத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்ககோரி விஜயநாராயணம் கிராம சமூக ஆர்வலர் நலச்சங்கம் சார்பில் பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் முடிவு எதுவும் எட்டப்படாததால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு போலீசார் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய முருகன் என்பவரை கைது செய்து நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து நாங்குநேரி யூனியன் அலுவலகம் அருகே உள்ள முதியோர் இல்லத்தில் தங்க வைத்தனர்.

நேற்று காலையில் நாங்குநேரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜு, இன்ஸ்பெக்டர் நாககுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிஷோர்குமார், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ் ஆகியோர் 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வடக்கு விஜயநாராயணத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து இன்னும் ஓரிரு நாளில் புதிய ஆழ்குழாய் கிணறு போட்டு வீடுகளுக்கு கூடுதல் குடிநீர் சப்ளை செய்யவும், தாமிரபரணி கூட்டு குடிநீர் பைப்லைன்களை உடனே செப்பனிடவும், ஏற்கனவே வீடுகளில் குடிநீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சுவதை தடுத்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து போராட்டக்குழுவினர் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story