அரக்கோணம்-வேலூர் கண்டோன்மெண்ட் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாக அறிவித்து கூடுதல் கட்டணம் வசூல்
அரக்கோணம்- வேலூர் கண்டோன்மெண்ட் இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயிலை, சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாக அறிவித்து, கூடுதல் கட்டணம் மற்றும் நேரம் மாற்றத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அரக்கோணம்- வேலூர் கண்டோன்மெண்ட் இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயிலை, சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாக அறிவித்து, கூடுதல் கட்டணம் மற்றும் நேரம் மாற்றத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பயணிகள் ரெயில்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் வரை தினமும் மூன்று முறை சாதாரண கட்டணத்தில் பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
அரக்கோணம் - வேலூர் கண்டோன்மெண்ட் பயணிகள் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ெரயில் பயணிகள் நல சங்கம் மூலமாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், கடந்த 4-ந் தேதி முதல் ெரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம்
அரக்கோணத்தில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் வரை சாதாரண கட்டணம் ரூ.20, சோளிங்கரில் இருந்து ரூ.10 செலுத்தி பொதுமக்கள் பயணித்து வந்தனர். இந்த நிலையில், சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாக அறிவித்து கூடுதல் கட்டணமாக அரக்கோணத்தில் இருந்து ரூ.40, சோளிங்கரில் இருந்து ரூ.30 வசூலிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அரக்கோணத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு இயக்கப்பட்டு வந்த ரெயில் தற்போது 2.5 மணிக்கு மாற்றப்பட்டு சுமார் 2½ மணி நேரம் பயணம் செய்து மாலை 4.35 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் சென்று சேருகிறது. எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு கூடுதல் கட்டணம், பயண நேரம் மாற்றம் ஆகியவற்றால் ெரயில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே ரெயில்வே நிர்வாகம் பழைய நேரப்படியே சாதாரண கட்டணத்தில் ரெயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.