மழை இல்லாததால் மஞ்சளாறு அணையில் குறையும் நீர்மட்டம்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
மஞ்சளாறு அணை
தேவதானப்பட்டியில் மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 268 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகள், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு பேரூராட்சி ஆகிய பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது.
இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் முதல்போக பாசனத்திற்காக அக்டோபர் மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதி இந்த அணை நிரம்பி உபரி வெளியேற்றப்பட்டது. இதனால் அக்டோபர் மாதம் வரை தொடர்ந்து அணை நீர்மட்டம் குறையாமல் இருந்தது.
குறையும் நீர்மட்டம்
ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின்பு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. குறிப்பாக கடந்த ஒரு மாதமாக மழை இல்லாததால் அணைக்கான நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. வரும் நாட்களில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து, நீர்வரத்து ஏற்பட்டால் மட்டுமே முதல்போக பாசனத்திற்கு அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.