தீபாவளி பண்டிகை விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது
தீபாவளி பண்டிகை விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது
திருப்பூர்
பண்டிகையை எதிர்பார்த்து எப்போதும் மக்கள் காத்திருப்பார்கள். அந்த நாளில் புதிய ஆடை அணிந்து, இனிப்பு சாப்பிட்டு மகிழ்ச்சியை குடும்பத்துடன் வெளிப்படுத்துவார்கள். அதிலும் தீபாவளி பண்டிகை என்றால் நம் நியாபகத்துக்கு வருவது பட்டாசும் இனிப்புதான். தீபாவளி அன்று காலையில் எழுந்து குளித்து புது ஆடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள்.
மந்தமான நிலை
தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மக்கள் அதற்காக தயாராகி வருகிறார்கள். பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே துணி கடைகள், இனிப்பு கடைகள், பட்டாசு கடைகளில் விற்பனை களை கட்ட தொடங்கும். ஆனால் பின்னலாடை தொழில் நகரமாக விளங்கும் திருப்பூர் மாநகரை பொறுத்தவரை தொழில் வீழ்ச்சி, மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததன் காரணமாக தீபாவளி விற்பனை மந்தமான நிலையிலேயே இருந்தது. இதனால் துணி, இனிப்பு, பட்டாசு போன்ற கடை வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
இந்தநிலையில் தற்போது பல தொழில் நிறுவனங்கள் தீபாவளி போனசை தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள காரணத்தால் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால் திருப்பூர் மாநகர் கடைவீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
சூடுபிடிக்க தொடங்கியது
குறிப்பாக இனிப்பு கடைகளில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஆர்டர்கள் அதிகளவில் வர தொடங்கும். ஆனால் தற்போதுதான் இனிப்பு கடைகளில் தொழில் நிறுவனத்தில் இருந்து வரும் ஆர்டர்கள், பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு, உறவினர்களுக்கு கொடுக்க தேவைப்படும் இனிப்பு வகைகளை வாங்க தொடங்கியுள்ளனர். தாமதமாக விற்பனை தொடங்கினாலும் தற்போது இனிப்பு கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது இனிப்பு கடை வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
அதேபோல் பட்டாசு கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் பட்டாசு வியாபாரிகளும் சந்தோஷம் அடைந்துள்ளனர்.
புதுமார்க்கெட் வீதி உள்ளிட்ட பல்வேறு கடைவீதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி துணி கடைகள், கம்மல், வளையல் கடைகள், கண்ணாடி கடைகள், பட்டாசு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர். இதனால் தீபாவளி விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
ரெயில், பஸ் பயணம்
அதேசமயம் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல வெளிமாவட்ட மக்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் ரெயில் பயணத்தை மேற்கொள்ள முன்பதிவு செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் ரெயில் முன்பதிவு நிலையம், கணினி மையங்களில் அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
தீபாவளியையொட்டி பஸ் மூலமாக சொந்த ஊருக்கு பயணம் செய்வதற்காக பஸ் நிலையங்களுக்கு செல்ல இருக்கும் பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பஸ் நிலையங்களில் கம்பத்தால் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.
தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கடைவீதிகளில் குவிய தொடங்கி இருக்கின்றனர். மேலும் சொந்த ஊருக்கு செல்ல முன்பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க இந்த கூட்டம் தொடர்ந்து அதிகரித்து விற்பனை நல்லபடியாக அமைய வேண்டும் என்று வியாபாரிகள் விரும்புகிறார்கள். எப்படியோ இந்த தீபாவளி எல்லாரும் சந்தோஷத்தோடு கொண்டாடும் பண்டிகையாக அமைந்தால் நன்றாக இருக்கும்.