மானை வேட்டையாடிய செந்நாய்கள்
மசினகுடி-மாயாறு சாலையில் மானை வேட்டையாடிய செந்நாய்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதை சுற்றியுள்ள மசினகுடி சுற்றுவட்டார வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் முதுமலை, மசினகுடி பகுதிக்கு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பின்னர் தனியார் ஜீப்புகளில் சவாரி செய்து வனப்பகுதி மற்றும் வன உயிரினங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்தநிலையில் மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சுற்றுலா பயணிகள் ஜீப்பில் சவாரி செய்து கொண்டிருந்தனர். மேலும் பொதுமக்களும் அந்த வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் ஒரு மானை செந்நாய்கள் கூட்டம் சுற்றி வளைத்து வேட்டையாடியது. அதனுடன் காட்டுப்பன்றியும் மானை கடித்தது. இதனால் மான் அந்தக் கூட்டத்துக்குள் சிக்கி வலியால் துடித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் செந்நாய்கள் கூட்டம் மானை கடித்து கொன்றது. பின்னர் அதன் உடல் பாகங்களை கடித்து தின்றபடியே வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது. இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.