கிரிவலப்பாதை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மான்கள்


கிரிவலப்பாதை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மான்கள்
x
தினத்தந்தி 5 Jun 2022 6:58 PM IST (Updated: 5 Jun 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கிரிவலப்பாதை வனப்பகுதியில் மான்கள் சுற்றித்திரிந்தன. இதனை கண்ட பொதுமக்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலை



திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதை வனப்பகுதியில் மான்கள் சுற்றித்திரிந்தன. இதனை கண்ட பொதுமக்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

கிரிவலப்பாதை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலை உள்ளது. இந்த மலையில் உள்ள வனப்பகுதியில் மான்கள், குரங்குகள், காட்டு பன்றிகள், மயில்கள் என பல்வேறு வன விலங்குகள் உள்ளன. திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் தண்ணீர் தேடி சுற்றித்திரிகின்றன. சில சமயங்கள் வனப்பகுதியில் இருந்து மான்கள் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வந்து விடுகின்றன.

அந்த சமயத்தில் அங்கு சுற்றித்திரியும் நாய்கள், மான்களை துரத்தி கடித்து விடுகின்றன. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் மான் உள்ளிட்ட விலங்குகள் வெளியே வராதபடி பெரும்பாலான இடங்களில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இயற்கைக்கு மாறாக கிரிவலப்பாதை ஒட்டி வரும் மான் உள்ளிட்ட விலங்குகளுக்கு அந்த வழியாக செல்லும் மக்கள் தின்பண்ட பொருட்கள், பழங்கள், கீரைகள் வழங்கி வருகின்றனர்.

மக்கள் மகிழ்ச்சி

இந்த நிலையில் கிரிவலப்பாதையில் பழனி ஆண்டவர் கோவில் எதிரில் உள்ள வனப்பகுதியில் மான்கள் கூட்டமாக மக்கள் நடமாடும் பகுதியில் உள்ள வேலியின் அருகில் நின்று கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்ற மக்கள் மான்களை கண்டதும் அங்கு வந்து செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இயற்கையாக செடி, கொடிகள், காய், பழங்களை சாப்பிட்டு வந்த மான்களுக்கு மக்கள் உணவு அளித்து பழகியதால் மான்களும் மக்களை கண்டு எந்தவித அச்சமும் இல்லாமல் மக்கள் ஏதாவது வாங்கி போடுவார்களா என்று பார்த்து கொண்டிருந்தன. எனவே வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள மான்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், வனப்பகுதியில் விலங்குகளுக்கு உணவுக்கு தேவையான செடிகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story