முதல்-அமைச்சர் குறித்து அவதூறு: பா.ஜனதா பெண் நிர்வாகி கைது
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜனதா பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருக்கும் இவர், பிரதமர் மோடிக்கு ஆதரவு கருத்துகளை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவேற்றம் செய்து வந்தார். மேலும் அவர் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்பான கருத்துகளையும் பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் உமா கார்கி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
மோதல் கருத்துகள்
அதில், சிங்காநல்லூரை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி உமா கார்கி, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார். தந்தையர் தினத்தன்று பெரியார், மணியம்மை குறித்தும் அவதூறான தகவல்களை வெளியிட்டு உள்ளார்.
மேலும் அவர் அவதூறு மீம்ஸ்களை வெளியிட்டு வருவதுடன், இரு மதத்தினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
பெண் நிர்வாகி கைது
அதன்பேரில் உமா கார்கி மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், இரு மதத்தினரிடையே மோதல் ஏற்படுத்த முயற்சி, அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டார். இதை அறிந்த பா.ஜனதாவினர் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கைதான உமா கார்கியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.