முதல்-அமைச்சர் குறித்து அவதூறு: எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை -தி.மு.க. அறிவிப்பு
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. அறிவித்து உள்ளது.
சென்னை,
எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட காணொலியில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சேற்றை வாரி இறைப்பதைபோல பொய்யையும், புனைசுருட்டையும் அள்ளிவிட்டிருக்கிறார். அமலாக்கத்துறை வழக்கு குறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை. செந்தில் பாலாஜியை எப்படி நடத்தினார்கள் என்பது குறித்தே எங்கள் தலைவர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ சட்ட மேதையைப்போல பேசியிருக்கிறார். அமலாக்கத்துறையின் 18 மணி நேர விசாரணையின்போது செய்த சித்ரவதை காரணமாகவே செந்தில்பாலாஜி உடல்நலம் பாதிக்கப்பட்டது.
நெஞ்சு வலி ஏற்பட அமலாக்கத்துறையே காரணம். இதுதான் உண்மை. ஆ.ராசா கைதை கண்டித்து உளறி கொட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆ.ராசா கைது குறித்து தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மறைத்து பேசி இருக்கிறார். இல்லாத கட்டுக்கதைகளை அள்ளிவிடும் எடப்பாடி பழனிசாமி, கனிமொழி கைது செய்யப்பட்டபோது, மு.க.ஸ்டாலின் சென்று பார்க்கவில்லையே என்கிறார்.
சட்டப்படி நடவடிக்கை
2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதி மாலை 4 மணிக்கு கனிமொழியை திகார் சிறைக்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் ஆ.ராசாவையும் சந்தித்தார். கனிமொழியும், ஆ.ராசாவும் டெல்லியில் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், செந்தில் பாலாஜியின் கைது சென்னையில் நடந்துள்ளது.
ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. முதல்-அமைச்சருக்கு, செந்தில் பாலாஜி பணம் கொடுத்ததாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
4 ஆண்டு சிறை தண்டனை பெற்று, ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று சவால் விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆமாம், யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லிவிட்டு பழனிசாமியே அ.தி.மு.க.வை அழித்துவிடுவார். துணிவு, நேர்மை இவையெல்லாம் என்னவென்றே தெரியாத எடப்பாடி பழனிசாமி எங்கள் தலைவர் பதற்றத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார்.
தன் ஆட்சிக்காலம் முழுவதும் பதற்றத்திலேயே இருந்து இப்போது இந்த தற்காலிக தலைமை பதவிக்காக பதற்றத்துடனேயே பணிந்து, குனிந்து, வளைந்து இருப்பவர்தான் எடப்பாடி பழனிசாமி என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
பச்சோந்தித்தனம்
"தி.மு.க., பூச்சாண்டிகள், 'ரெய்டு', மிசா உள்ளிட்ட அனைத்தையும் சந்தித்த இயக்கம். எனவே இந்த இயக்கம் எப்போதும் அவருக்கு துணை நிற்கும்" என்பதை எடுத்துக்கூறவே முதல்-அமைச்சர், செந்தில் பாலாஜியை சந்தித்தார். ஆனால் அந்த சந்திப்புக்கு காரணமாக கற்பனை கதைகளை எல்லாம் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நடவடிக்கைளால் தி.மு.க.வுக்கு எந்த சிக்கலும் வரப்போவதில்லை. ஏனென்றால் எங்களுக்கு 'மடியில் கனமில்லை வழியில் பயமில்லை எனும் அளவிற்கும் 'மிஸ்டர் கிளீன்' என்று பெயரெடுத்தவர்தான் எங்களது தலைவர் மு.க.ஸ்டாலின். எனவே எங்களுக்கு பதற்றம் ஏற்படுவதற்கான தேவையேயில்லை.
அமலாக்கத்துறையின் நோக்கமே முறைகேடான முறையில் செந்தில் பாலாஜியை டெல்லிக்கு கொண்டு செல்வதாகத்தான் இருந்துள்ளது என்பதாலேயே முதல்-அமைச்சர் நேரில் சென்றார். இப்போதும் சட்ட ரீதியாகவே அமைச்சரின் சிகிச்சை மற்றும் பாதுகாப்புக்காக ஐகோர்ட்டை நாடி உத்தரவுகளை பெற்றிருக்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதை எல்லாம் இட்டுக்கட்டி ஏதோ பச்சோந்தி என்றெல்லாம் பேசி இருக்கிறார். நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் அது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே இருக்கும் என்பது நாடறிந்தது. எனவே, பச்சோந்தித்தனம் என்பது பிறவி குணம்; அது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் உள்ளதே தவிர, தி.மு.க.வுக்கு இல்லை. இது கொள்கை உணர்வுமிக்க கட்சி. அதை பேரறிஞர் அண்ணா உருவாக்கியபடி கலைஞர் கருணாநிதி வழியில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான தலைவர் முன்னேற்றி செல்கிறார். எனவே எடப்பாடி பழனிசாமி வாயை பொத்திக்கொள்வதே அவருக்கு நலம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.