காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை - அண்ணாமலை கோரிக்கை
காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், "காவல் நாய்களே", "எச்சைப் பிழைப்பு", போன்ற கோஷங்களை எழுப்புவது காக்கி சட்டைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை இதுபோன்ற அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.
ஓரிரு காவலர்கள் செய்யும் தவறுகளுக்கு, ஒட்டு மொத்த காவல்துறையினரை அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. தங்களது உயிரை துச்சமாகக் கருதி, மக்களைக் காக்க உழைக்கும் காவல்துறையினரை, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், அரசியல் காரணங்களுக்கும், இது போன்று அவதூறாகப் பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவல்துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில் கோஷங்களை எழுப்பும் தங்களது கூட்டணி கட்சியினர் மேல், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.