பழுதடைந்த அரசு பஸ்களை மாற்ற வேண்டும்


பழுதடைந்த அரசு பஸ்களை மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் இருந்து பந்தலூர் பகுதிக்கு இயக்கப்படும் பழுதடைந்த அரசு பஸ்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் இருந்து பந்தலூர் பகுதிக்கு இயக்கப்படும் பழுதடைந்த அரசு பஸ்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பழுதடைந்த பஸ்கள்

கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலக கட்டுப்பாட்டில் 48 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் கூடலூரில் இருந்து பந்தலூர் தாலுகா பகுதிக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. இதன் காரணமாக பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் மழை பெய்யும் காலத்தில் பராமரிப்பின்றி இயக்கப்படும் பஸ்களுக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் குடைகளை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. இதனால் பழைய மற்றும் பராமரிப்பின்றி இயக்கப்படுவதற்கு பதிலாக புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட வில்லை.

தொங்கும் படிக்கட்டு

இந்த நிலையில் சில பஸ்களில் பயணிகள் இறங்கும் படிக்கட்டுகளின் பக்கவாட்டில் உள்ள தகரங்கள் நீட்டிக்கொண்டு காணப்படுகிறது. இதனால் பயணிகள் பஸ்சில் ஏறும் போது கை விரல்களை பதம் பார்க்கும் அபாயம் உள்ளது. மேலும் படிக்கட்டு தொங்கி கொண்டிருக்கும் அவல நிலை காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மண்வயல் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரின் கை விரல் பஸ்சில் உள்ள தகரத்தால் துண்டிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது.இதனால் மீண்டும் அதுபோல் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, பஸ்களில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பயணிகள் படுகாயத்தால் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பழுதடைந்த பஸ்களை உடனடியாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story