திரிபுராவில் மாரடைப்பால் இறந்த ஈரோடு ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்


திரிபுராவில் மாரடைப்பால் மரணம் அடைந்த ஈரோடு ராணுவ வீரர் வடிவேல் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஈரோடு

திரிபுராவில் மாரடைப்பால் மரணம் அடைந்த ஈரோடு ராணுவ வீரர் வடிவேல் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ராணுவ வீரர்

நஞ்சை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 38). இவருடைய மனைவி நித்தியா. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். வடிவேல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து எல்லை பாதுகாப்பு படை வீரராக கடந்த 18 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

தற்போது வடிவேல் திரிபுராவில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். தினமும் வடிவேல் தனது மனைவியுடன் போனில் பேசுவது வழக்கம். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட வடிவேல் தனது மனைவியுடன் செல்போனில் பேசி உள்ளார்.

மாரடைப்பால் இறந்தார்

அப்போது திரிபுராவில் கடும் குளிர் நிலவி வருவதாக மனைவியிடம் கூறி உள்ளார். இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வடிவேல் கடந்த 11-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதுகுறித்த தகவல் வடிவேல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

21 குண்டுகள் முழங்க...

இதைத்தொடர்ந்து வடிவேலின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி திரிபுராவில் இருந்து விமானம் மூலம் அவருடைய உடல் கோவைக்கு நேற்று காலை கொண்டுவரப்பட்டது. பின்னர் ராணுவ வாகனத்தில் அவரது உடல் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளிக்கு வந்து சேர்ந்தது.

அப்போது அவரது உடலை பார்த்து மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து வடிவேல் உடல் ராணுவ வாகனத்தில் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க வடிவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.


Next Story